நைனா முகமது படுகொலை; குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும், மாஜக கோரிக்கை.
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நைனா முகமதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நீதியை நிலைநாட்ட மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலப்பட்டினம் கிராமத்தைச் சார்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். இவர் 22.04.2024 இரவு 11 மணிக்கு மேல் தனது கடையை அடைத்துவிட்டு, மீமிசலிலிருந்து தனது ஊரான கோபாலபட்டினத்திற்கு, ஊரின் முக்கியச் சாலை வழியாக செல்லும்பொழுது, நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் ரசூல் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் மளிகை கடை நடத்தி வந்தார். கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்ற நைனா முகமது நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது திட்டமிட்ட படுகொலையாகத் தெரிகிறது. இச்சம்பவம் மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே நைனா முகமதின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை படுகொலை செய்த குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறினார்.