மன்னார் வளைகுடா பகுதியில்vகடல் அட்டைகள் கடத்தலை தடுக்க கூடுதல் கண்காணிப்பு; பொதுமக்கள் வலியுறுத்தல்.
கீழக்கரை, ஏப்.24-
இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவில் அரிய வகையான பவளப்பாறை, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. கடலில் கலக்கும் கழிவு நீரை உட்கொண்டு அதனை கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஏற்றவாறு சுவாசத்தை வெளிப்படுத்துவதில் கடல் அட்டை முதன்மையான உயிரினங்களில் ஒன்றாகும். இதனால் கடல் அட்டைகள் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அவற்றை சட்ட விரோதமாக சிலர் பிடித்து பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன் வளங்கள் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்வாதாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் போதைப்பொருட்கள் புழக்கமும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், ஒரு டன் கடல் அட்டை சேர்ந்தால்தான் இவர்கள் அதனை இலங்கைக்கு கடத்த முடியும் எனவும் ஒரு டன் சேரும் வரை காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் பிடிபட்ட இரட்டையர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக்கரை, மாயாகுளம், ஏர்வாடி, சாயல்குடி, மண்டபம், வேதாளை, ராமேசுவரம் போன்ற பகுதிகளில் கடல் உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை, கடலோர காவல் படையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.