கோட்டைப்பட்டினம் அருகே கடலில் மிதந்த 40 கிலோ கஞ்சா மூட்டை; அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை.
கோட்டைப்பட்டினம் அருகே கடலில் மிதந்த 40 கிலோ கஞ்சா மூட்டை; அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை.
கடலில் மிதந்தகஞ்சா மூட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு.
இவர் தனது நாட்டுப்படகில் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் 3 பேருடன் சேர்ந்து மீன்பிடிக்க சென்றார்.
இவர்கள் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் ஒரு சாக்கு மூட்டை மிதந்து வந்தது. இதைப் பார்த்த மீனவர்கள் அந்த மூட்டையை மீட்டு படகில் ஏற்றினர்.
பின்னர் அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இதுகுறித்து உடனடியாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
40 கிலோ கஞ்சா
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இதுகுறித்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு இருந்து வந்த அலுவலர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அதிகாரிகள் அங்கு அந்த கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்தனர். அதில் 2 சாக்கு பைகளில் சுமார் 40 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து கஞ்சாவை திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
கஞ்சா பொட்டலங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து, அதன் மீது ‘டேப்’ ஒட்டி, தண்ணீர் போகாத வகையில் பிளாஸ்டிக் கவர் போட்டு, அதன் மீது 2 சாக்கு பைகள் வைத்துக்கட்டி, பாதுகாப்பாக இருந்துள்ளது.
இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள் படகில் இருந்து தவறி விழுந்திருக்கலாம்? என்ற கோணத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






