தூத்துக்குடியில் புதிய மின்சார கார் தொழிற்சாலை திறப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் புதிய மின்சார கார் தொழிற்சாலை திறப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
“வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது” என்று தூத்துக்குடியில் நடந்த மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
40 சதவீதம் உற்பத்தி
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் பெரும் தொழில் திட்டமாக தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில், முதற்கட்டமாக ரூ.1,300 கோடி முதலீட்டில் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய வின் குழுமம், முதலீடுகளுக்காக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்ததற்கு நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். வியட்நாமிஸ் மொழியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ‘‘சாமுன் நேஒய் வின்பாஸ்ட் தமிழ்நாடு”. வின்பாஸ்ட் நிறுவனம், நான் அடிக்கல் நாட்டி, 18 மாதத்தில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
வின்பாஸ்ட், தமிழ்நாடு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது. தமிழ்நாடுதான், இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் ‘தலைநகரம்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்ட்.
18 மாதத்தில் உற்பத்தி
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, ரூ.16 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், இந்த உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஆலை வந்ததனால் தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய தொழில் பகுதியாக வளர்ச்சியடையும். அதனால், உறுதியோடு சொல்கிறேன். இந்த நாள் தென் மாவட்டங்களின் ஒரு பொன்னாள். இதுதான், தமிழ்நாட்டின் ‘தொழில் செய்வதற்கு எளிது ‘- என்பதற்கு ஒரு அத்தாட்சி.
முதற்கட்டமாக, இதுவரை ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் எஸ்.யூ.வி. மின்சார கார்கள் உற்பத்தியாக இருக்கிறது. தெற்காசியாவிலேயே, வியட்நாமிற்கு வெளியில், இந்த நிறுவனம் தொடங்கியிருக்கும் முதல் மின்வாகன உற்பத்தித் திட்டம் இதுதான்.
தமிழ்நாட்டில், அதுவும் நம்முடைய தூத்துக்குடியில் இருக்கும் இந்த ஆலைதான், இந்தியாவிலேயே முழு மின்சார பயணிகள் வாகன உற்பத்தி ஆலையாகும். இதனால், இந்த வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரசின் நோக்கம்
என்னுடைய கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய ‘‘நான் முதல்வன்’’ திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சி பெற்று, இதே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட டிப்ளமோ படித்த மாணவர்கள், இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீத பணியாளர்களை தூத்துக்குடி மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் இருந்துதான் இந்த நிறுவனம் பணியமர்த்த போகிறார்கள். உலகளாவிய முதலீட்டில் உள்ளூருக்கான முழுமையான வளர்ச்சி என்கின்ற திராவிட மாடல் அரசின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இந்த திட்டத்தால் தூத்துக்குடியை சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும், உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகள் பெருகும். அதனால் மோட்டார் வாகன தொழிற் கூடமாக தூத்துக்குடி உருவெடுத்து வருகிறது. தமிழ்நாடுதான் ‘மின் வாகனங்களின் தலைநகரம்’ என்று உலகத்திற்கு நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
கோரிக்கை
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், வின் குழுமத்தினரான உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். உங்களின் வின் குழுமம் வாகனத் துறையில் மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் கோலோச்சும் குழுமம். உங்களின் வருங்கால முதலீடுகளை எல்லாம், தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அன்பரசன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணண், மனோ தங்கராஜ், டி.ஆர்.பி. ராஜா, கனிமொழி எம்.பி., வின்பாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பாம் சான் சவ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற டிப்ளமோ மாணவர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.





