விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; தேர்தல் அதிகாரி தகவல்.

விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; தேர்தல் அதிகாரி தகவல்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (எஸ்.ஐ.ஆர்.) ஒரு பகுதியான, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களை மீண்டும் வாக்காளராக இணைத்துக்கொள்ள ஒரு மாத காலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18-ந்தேதிவரை இந்த கால அவகாசம் தரப்பட்டுள்ளது. புதிய முகவரியில் குடியேறியவர்கள், அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று 6-ம் எண் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து அளிக்கலாம்.
வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரின் அலுவலகங்களுக்கும் சென்று (ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்கள்) இந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதற்காக இந்த மாதத்திலும், ஜனவரி மாதத்திலும் 2 சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பை தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடுகிறது.
வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரியில் 18-ந்தேதிக்கு முந்தைய ஏதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு முகாம் நடக்க வாய்ப்புள்ளது. 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் பெயர் சேர்க்க மனு அளிக்கலாம்.
முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்காகவும் அதற்கான படிவங்களை அளிக்கலாம்.
பெயர் சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்க முடியும். ஆனால், ஆதார் அட்டையில் உள்ள பெயர், இனிஷியல் போன்றவை, வாக்காளர் அளிக்கும் முகவரிச் சான்று போன்றவற்றுடன் மிக சரியாக பொருந்தினால் மட்டுமே அந்த படிவம் ஆன்லைனில் ஏற்கப்படும்’ என்றார்.




