இலக்கிய மன்ற போட்டிகளில் வென்றால் மாணவர்கள் வெளிநாடு பயணிக்க வாய்ப்பு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பேச்சு

புதுக்கோட்டை, பிப்ரவரி 21 –
இலக்கிய மன்ற போட்டிகளில் வென்றால் மாணவர்கள் வெளிநாடு பயணிக்க வாய்ப்பு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பேச்சு
இலக்கிய மன்ற போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாக தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சண்முகம் தொடங்கி வைத்து பேசியதாவது
மாவட்ட அளவில் நடைபெறும் இந்த இலக்கிய மன்றபோட்டியில் தமிழ் வழியில் 4 தலைப்புகளிலும், ஆங்கில வழியில் 4 தலைப்புகளிலும் வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டியானது மாணவ, மாணவிகளின் தனித்திறமையினை மேம்படுத்துவதாகும். மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளில் இருந்து தமிழ் வழி, ஆங்கில வழி ஆகியவற்றில் தலா 4 தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
வெளிநாடு செல்ல வாய்ப்பு:
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள்.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் இலக்கிய மன்ற போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற 3 மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பினை பெற்று சென்று வந்தனர்.
இன்னும் ஒரு மாணவர் அத்தகைய வாய்ப்பினை பெற இருக்கிறார். இவர்களை போல மற்ற மாணவ-மாணவிகளும் போட்டியில் வெற்றி பெற்று சென்று வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், வெள்ளைச்சாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாணவ-மாணவிகள் பலர் பங்கேற்றனர்.