பக்ரீத் பண்டிகையையொட்டிரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.
புதுக்கோட்டை, ஜூன்.15-
பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
ஆட்டுச்சந்தை
புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், நாட்டுக்கோழிகள், காய்கறிகளை புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்தநிலையில் பக்ரீத் பண்டிகை நாளைமறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகாலை 3 மணி முதலே வியாபாரிகளும், விவசாயிகளும் குவிந்ததால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
ரூ.2 கோடிக்கு விற்பனை
புதுக்கோட்டை சந்தைக்கு 10 கிலோ முதல் 20 கிலோ எடையுள்ள ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.10 ஆயிரம் வரையிலும், 20 கிலோ ஆடுகள் ரூ.18 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி கொடுப்பதற்காக, முஸ்லிம்கள் அதிகளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதனால் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. போட்டி போட்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர். வெள்ளாடுகளை காட்டிலும், செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனையானது. புதுக்கோட்டை சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்றனர்.
ஆடுகள் விற்பனை
இதேபோல், கோட்டைப்பட்டினம், அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், காலாடிப்பட்டி, வீரப்பட்டி. மாங்குடி, பெருமநாடு, புல்வயல், குடுமியான்மலை, வயலோகம் உள்ளிட்ட முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதற்காக செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வியாபாரிகள் ஓட்டி சென்று விற்பனை செய்தனர்.
இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.