பண மோசடி குறித்து 1930 எண்ணில் புகார் செய்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்: சைபர்கிரைம் போலீசார் துண்டு பிரசுர விழிப்புணர்வு
இராமநாதபுரம், டிச.17-
ஆன்லைன் மூலம் பண மோசடி குறித்து 1930 எண்ணில் புகார் செய்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்: சைபர்கிரைம் போலீசார் துண்டு பிரசுர விழிப்புணர்வு செய்தனர்.
ஆன்லைன் மோசடி
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்.கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று ரகசிய எண்ணை பெற்று மோசடி செய்து வந்த நிலையில் அதன் பின்னர் செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேவைப்படுவதாக கூறியும், ஆன்லைனில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அதனை பெற முன்பணம் செலுத்துமாறு கூறியும், முகநூல் பதிவில் பண உதவி கேட்டும், ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி, பங்கு வர்த்தக முதலீடு என பல்வேறு மோசடிகள் நாள்தோறும் நடந்துவருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த மோசடி சம்பவவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடியால் பலர் ஏமாந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
வங்கி கணக்கை முடக்கி…
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நூதன மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரும் பணம் மற்றும் வங்கி தொடர்பான எந்த குறுந்தகவலையும் கண்டுகொள்ளக்கூடாது. எந்த தகவலாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் வங்கிக்கே நேரடியாக சென்று விசாரித்து கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலம் பண மோசடி செய்து யாரையும் ஏமாற்றினால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தினை மோசடி நபர்களின் வங்கி கணக்கினை முடக்கி அதில் உள்ள பணத்தினை யாரும் எடுக்காதவாறு தடுத்து கடும் நடவடிக்கை எடுத்துவிடலாம். அந்த பணத்தினை பல வங்கி கணக்கிற்கு மாற்றியிருந்தாலும் அனைத்து வங்கி கணக்கினையும் முடக்கி விடலாம்.
இதன்பின்னர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அந்த பணத்தினை திரும்ப பெற்றுவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.