திருவப்பூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்பணிக்கு அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை, டிச.17-
திருவப்பூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்பணிக்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவப்பூர் ரெயில்வே கேட்
புதுக்கோட்டை திருவப்பூரில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. திருச்சி-ராமேசுவரம் ரெயில்வே தண்டவாள பாதையில் புதுக்கோட்டை மாநகரில் பிரதான பகுதியில் இந்த கேட் அமைந்துள்ளதால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படும். ரெயில்கள் கடந்து செல்லும் போது கேட் மூடப்படுவதில் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
இதனால் திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ரெயில்வே துறையினரும் ஒப்புதல் வழங்கியதால் மேம்பாலம் அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு ரூ.41 கோடியே 24 லட்சம் நிதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒதுக்கியது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சுரங்கபாதையுடன் கூடிய ரெயில்வே மேம்பாலம் அமைக்க 6,446 சதுரமீட்டர் பட்டா நிலம் மற்றும் 7,953 சதுர மீட்டர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரிகள் ஆய்வுக்கு பின் அடுத்தக்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.