ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள்; தலா ரூ.10 கோடியில் விரிவாக்கம், கட்டுமான பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை, அக்.7-
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.10 கோடியில் விரிவாக்க கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
விசைப்படகுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கிருந்து மீன்பிடிக்க செல்கின்றன.
விசைப்படகுகளை நிறுத்தவும், மீன்களை பிடித்து வந்த பின் இறக்கவும் வசதியாக கடற்கரையையொட்டி மீன்பிடி இறங்குதளங்கள் 2 இடங்களிலும் உள்ளன.
இந்த நிலையில் மீன்பிடி இறங்குதளத்தில் படகுகளை நிறுத்தி மீன்களை இறக்குவதற்கு வசதியாக இந்த தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என மீனவர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை வந்த போது மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட்டார். இதில் தலா ரூ.10 கோடியில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் விரிவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
பணிகள் மும்முரம்
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடி இறங்கு தளங்களில் விரிவாக்க பணிகள் தொடங்கின. கடல்பகுதியில் தற்போது உள்ள தளத்தில் விரிவுபடுத்த கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராட்சத எந்திரங்கள் கொண்டு தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினத்தில் கடலில் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோட்டைப்பட்டினத்தில் 175 மீட்டர் நீளத்திற்கு மீன்பிடி இறங்குதளம் விரிவாக்கப்படுகிறது. இதில் தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜெகதாப்பட்டினத்தில் 120 மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும்” என்றனர்.
இந்த பணிகள் முடிவடைவதின் மூலம் மீனவர்கள் கூடுதலாக விசைப்படகுகளை நிறுத்தி வைத்து மீன்களை இறக்க முடியும். மேலும் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைக்கவும் முடியும்.