மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’; துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.
புதுக்கோட்டை, மார்ச்.23-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கிய நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு மைய அறையில் இருந்து எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் நேற்று முன்தினம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அறைக்கு ‘சீல்’
ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அப்போது தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டனர். அதன்பின்னர் ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி மற்றும் அரசு அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திர அறைக்கு ‘சீல்’ வைத்தனர்.