மீமிசல் அருகே முத்துக்குடாவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
கோட்டைப்பட்டினம், ஆக.19-
மீமிசல் அருகே முத்துக்குடாவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஈச்ச மரத்து காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது.
பெரிய மாடு, சின்ன மாடு, நாலு பல் கன்று போன்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சின்ன மாடு பிரிவில் 32 மாட்டு வண்டிகளும், நாலு பல் கன்று குட்டி பிரிவில் 33 ஜோடி மாடுகளும் என மொத்தம் 78 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
பந்தயத்தில் ஒன்றை ஒன்று முந்தி செல்ல மாட்டு வண்டிகள் பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்றதில் மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பணம், கேடயம் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.