ஜெகதாப்பட்டினத்தில் ரூ.10 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் விரிவாக்க பணிகள் தொடக்கம்.

ஜெகதாப்பட்டினம், ஏப்.25-

ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளத்தில் ரூ.10 கோடியில் விரிவாக்க பணிகள் தொடங்கியது.

கடற்கரை பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் இதனையொட்டியுள்ள கிராமங்கள் கடற்கரை பகுதியாகும். இங்கிருந்து 600-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். இதேபோல் மணமேல்குடி, கட்டுமாவடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க செல்வது உண்டு.

விசைப்படகுகளில் மீன்கள் அதிகளவில் மீனவர்கள் பிடித்து வருவது உண்டு. இதில் மஞ்சள் பாறை, சீலா, தேங்காய் பாறை, காலா, வாவல், முரல், செங்கனி, நகரை, கிழங்கன், விலை மீன், திருக்கை, இறால், கணவாய் உள்ளிட்ட மீன்களும், நண்டும் அதிகம் கிடைக்கும். மேலும் இங்குள்ள மீன்களுக்கு தனி மவுசு உண்டு.

விரிவாக்க பணிகள் தொடக்கம்

இந்த நிலையில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் கடற்கரை பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தை விரிவுபடுத்த வேண்டும். கடலில் ஆழத்தை தூர்வார வேண்டும் என மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மீன்பிடி இறங்கு தளங்கள் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிகளுக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டன. இதையடுத்து மீன்பிடி இறங்குதளத்தில் விரிவாக்க பணிகள் ஒப்பந்தம் விடப்பட்டன. இதில் ஜெகதாப்பட்டினத்தில் மீன் பிடி இறங்கு தளத்தில் ரூ.10 கோடியில் விரிவாக்க பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மீன்பிடி இறங்கு தளம் என்பது கரையில் படகு நிறுத்தி வைப்பதற்கான இடம். மேலும் மீன்களை அதில் இறக்கி வைப்பது உண்டு. இந்த இறங்கு தளத்தில் சுமார் 80 படகுகள் நிறுத்தி வைக்க முடியும். மற்ற படகுகள் சற்று தள்ளி நிறுத்தப்படும்.

ராட்சத எந்திரங்கள்

மீன்பிடி இறங்கு தளத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஏற்கனவே உள்ள இறங்கு தளத்தில் புனரமைப்பு பணிகளும் நடைபெறுகிறது. விரிவாக்க பணிகளுக்காக கடற்கரை பகுதியில் ஏற்கனவே உள்ள இறங்குதளம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மண் நிரப்பப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக ராட்சத எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு, பகலாக பணிகள் நடைபெறுகிறது. இந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மீன்பிடி தடைக்காலமாக இருப்பதால் விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. கடலில் இருந்து சற்று தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

கோட்டைப்பட்டினம்

இதேபோல் கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளத்தில் ரூ.10 கோடியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஒப்பந்தம் விடப்பட்டன. அந்த பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த விரிவாக்க பணிகள் மூலம் ஒரே நேரத்தில் கூடுதலான படகுகளை கரையில் நிறுத்தி வைக்க முடியும். பாதுகாப்பாகவும் இருக்கும்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், விரிவாக்க பணியோடு கரைப்பகுதியை தூர்வார வேண்டும். இந்த பகுதியில் கடல் ஆழம் குறைவாக காணப்படுகிறது. இதனால் படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே கடலிலும் தூர்வார வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button