மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.
கட்டுமாவடி, ஏப்ரல். 18-
தமிழக முழுவதும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் செயல்படுகின்றன.
இந்த மீன் மார்க்கெட்டிற்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இராமநாதபுரம், பாம்பன், இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 60 நாட்களாக உயர்த்தப்பட்டது.
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலில் மடிவலை மற்றும் இழுவை வலை மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த ஆழத்தில் கரையோரங்களில் மீன்பிடிக்கலாம். இதனால் மீனவர்கள் குறைந்த ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் நண்டு வலை, முரல் வலை, பட்டி வலைகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு குறைந்த ஆழத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருவதால் மீன்களின் வரத்து குறைந்து மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ இறால் 350 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும், கலிங்க முரல் ஒரு கிலோ 350 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும், வாடு முரல் 260 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்கும், நண்டு ஒரு கிலோ 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும், செங்கனி மீன் கிலோ 450 ரூபாயிலிருந்து 550 ரூபாய்க்கும், காளை மீன் ஒரு கிலோ 550 ரூபாயிலிருந்து 700 ரூபாய்க்கும், கொடுவா மீன் ஒரு கிலோ 550 ரூபாயிலிருந்து 700 ரூபாய்க்கும், குளத்து ஜிலேபி மீன் ஒரு கிலோ 30 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று அனைத்து வகையான மீன்களும் 100 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகே மீன்களின் விலை குறையும். மீன்களின் விலை உயர்வால் மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.