புகார் மனுவை பதிவு செய்யவில்லையா? போலீசார் மீது கடும் நடவடிக்கை! மத்திய மண்டல ஐ.ஜி. அதிரடி உத்தரவு!

புகார் மனுவை பதிவு செய்யவில்லையா? போலீசார் மீது கடும் நடவடிக்கை! மத்திய மண்டல ஐ.ஜி. அதிரடி உத்தரவு!
Action against Cops for Not Registering Public Complaints IG Balakrishnan Warning – GPM Thalaimurai Media
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் முறைப்படி பதிவேற்றம் செய்யாத காவல்துறையினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில், பொதுமக்களின் புகார்களைப் பெற்று அவற்றை வரவேற்பாளர் பதிவேட்டில் (Receptionist Register) பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமான நடைமுறையாகும்.
ஐ.ஜி. நடத்திய திடீர் ஆய்வு: சமீபத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, சில காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணியில் இல்லாததும், புகார்களைப் பதிவு செய்வதில் தொய்வு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 9 மாவட்ட எஸ்பி-க்களுக்கும் அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
- வரவேற்பாளர் இல்லையெனில்: வரவேற்பாளர் விடுமுறையில் இருந்தாலோ அல்லது பணியில் இல்லாத நேரத்திலோ, அங்குள்ள பாரா போலீஸ்காரர் புகாரைப் பெற்று பதிவேட்டில் ஏற்ற வேண்டும்.
- மாற்று ஏற்பாடு: பாரா காவலரும் இல்லாத பட்சத்தில், நிலைய எழுத்தர் (Writer) அல்லது நிலைய பணி அதிகாரி (GDO) அந்த மனுவைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிர்வாக நடவடிக்கை: எக்காரணம் கொண்டும் புகாரைப் பதிவு செய்யாமல் மக்களைத் திருப்பி அனுப்பக் கூடாது. இதில் அலட்சியம் காட்டும் வரவேற்பாளர்கள், நிலைய பணி அதிகாரிகள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும்.
காவல் நிலையத்திற்கு வரும் சாமானிய மக்களுக்கு முறையான பதில் மற்றும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





