கோபாலப்பட்டினத்தில் குப்பை அகற்றம் சீர்குலைவு – தேங்கும் கழிவுகளை தீ வைத்த மர்ம நபர்கள்; மக்கள் கடும் அவதி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் குப்பை மேலாண்மை சீர்குலைந்ததன் விளைவாக, குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து கிடப்பது வழக்கமாகிவிட்டது.
தேங்கி கிடக்கும் இந்தக் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீவைக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அந்தப் பகுதிகளில் நச்சுப் புகை பரவி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அதே போன்று நேற்று சனிக்கிழமை அன்று கோபாலப்பட்டினம் சாலை ஓரத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை யாரோ தீயிட்டு எரித்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் நச்சு புகை பரவி காற்று மாசுபாடு ஏற்ப்பட்டது.
மேலும் புகை அதிக அளவில் பரவி அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்க முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.
வீட்டுக்குள் கூட புகை நுழையும் நிலை
பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கலந்த குப்பைகள் எரியும்போது உருவாகும் கரும்புகை,
- மூச்சுத்திணறல்
- கண் எரிச்சல்
- தொண்டை வலி
போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அருகிலுள்ள காலி நிலங்கள் – குப்பை தேக்குமிடமாக மாறியுள்ளன
கோபாலப்பட்டினம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலியாக உள்ள நிலங்களில் குப்பைகள் கொட்டுவது வழக்கமாகி விட்டது. சீரான குப்பை அகற்றும் பணிகள் நடைபெறாததே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பாதிப்பு
பிளாஸ்டிக் எரிவதால் வெளியேறும் நச்சு வாயுக்கள்,
- காற்று மாசுபாடு
- உடல்நல ஆபத்து
- சுற்றுச்சூழல் சேதம்
என்று பல தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
குப்பைகள் தேங்கி கிடப்பதால் குப்பைகளில் கிடக்கும் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடுகின்றனர். மேலும் அந்த நாய்கள் தெருவுக்குள் புகுந்து தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களை துரத்தி கடித்து விடுன்கின்றது. தேங்கி கிடக்கும் குப்பையால் நாய்கடி சம்பவங்களும் அதிகாமா நடப்பது குறிப்பிடத்தக்கது.
“பிரச்சினை தீர வேண்டுமே தவிர பழக்கமாக மாறக்கூடாது” – மக்கள் கவலை
இந்த நிலை தொடர்ந்தால், குடியிருப்பு பகுதியில் வாழ்வதே சிரமமாகிவிடும் என்பதால், குப்பை மேலாண்மையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் தலையிட்டு குப்பைகள் அகற்றப்படுவதற்கும், குப்பை எரிப்பு தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குப்பைளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊர் மக்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகம் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.





