முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் உடல் நசுங்கி பலி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்

முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் உடல் நசுங்கி பலி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
முத்துப்பேட்டை அருகே அரசு பஸ்சும், ஆம்னி வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது நடந்த இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குழிபறிச்சல் நெல்லிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சாஜிநாத்(வயது 30), ராஜேஷ்(30), ராகுல்(29), சுஜித்(25), சாபு(25), சுனில்(35), ரஜினிஷ்(40). இவர்கள் 7 ேபரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.
அதன்படி ஒரு ஆம்னி வேனில் 7 பேரும் நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்டனர். வேனை சாஜிநாத் ஓட்டினார்.
அரசு பஸ்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல்
நேற்று காலை 7 மணி அளவில் இவர்கள் வந்த வேன் கடற்கரை சாலை வழியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கருவேப்பங்குறிச்சி கிராமத்தில் வந்தது.
அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை நாகை மாவட்டம் ஒரத்துறை சேர்ந்த சரவணன்(49) ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், ஆம்னிவேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆம்னிவேன் முற்றிலுமாக நொறுங்கியது.
4 பேர் உடல் நசுங்கி பலி
இந்த விபத்தில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சாஜிநாத், ராஜேஷ், ராகுல், சுஜித் ஆகிய 4 பேரும் வாகன இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த சாபு(25), சுனில்(35), ரஜினிஷ்(40) ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருன்கரட், நாகை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வந்த அனைவரும் கட்டிட தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இது குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
ஆம்னிவேன் மீது அரசு பஸ் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.




