மணமேல்குடியில் போலி டாக்டர் கைது.
மணமேல்குடி, மார்ச்.28-
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி சந்தைப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். அவர் அங்குள்ள ஒரு அறையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர், மருத்துவம் படிக்காமல் மருந்து கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்படி மணமேல்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரண்யா தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அரசின் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாபிக் இப்ராகிம் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரை மணமேல்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.