ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்டெய்னர் லாரியில் 340 கிலோ கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது.
மணமேல்குடி, ஜன.11-
ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை ஜெகதாப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
ஆந்திர மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக சென்னை கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அந்த கன்டெய்னர் லாரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
லாரியை விரட்டி பிடித்தனர்
இந்த நிலையில் கோட்டைப்பட்டினம் சோதனைச்சாவடியில் சந்தேகப்படும்படியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட முயன்றனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இதற்கிடையில் கியூ பிரிவு போலீசாரும் அங்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது வாகனங்களில் அந்த லாரியை விரட்டி சென்று ஜெகதாப்பட்டினம் அருகே மடக்கினர். மேலும் லாரியில் இருந்த டிரைவர் மற்றும் மற்றொருவரை பிடித்தனர். தொடர்ந்து கன்டெய்னர் லாரியின் கதவை திறந்து சோதனையிட்டனர்.
அந்த லாரியின் உள்ளே மீன்கள் வைத்து செல்லக்கூடிய ஐஸ் பெட்டிகள் காலியானவை ஏராளமாக குவிந்து கிடந்தன. இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். அந்த ஐஸ் பெட்டிகளை இறக்கி சோதனை செய்தனர்.
இதில் ஐஸ் பெட்டிகளுக்கு இடையில் சிறிய சாக்கு மூட்டைகள் 10 எண்ணிக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது.
340 கிலோ கஞ்சா பறிமுதல்
இதையடுத்து லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரித்ததில் லாரி டிரைவர் காரைக்கால் மேல வாஞ்சூரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 37) என்பதும், மற்றொருவர் லாரியின் உரிமையாளர் காரைக்காலை சேர்ந்த பிரகாஷ் (37) என்பதும் தெரியவந்தது. கஞ்சா மூட்டைகளை போலீசார் எடையிட்டு பார்த்தனர்.
இதில் 340 கிலோ கஞ்சா இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிலம்பரசன், பிரகாஷ் ஆகியோரை ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 340 கிலோ கஞ்சாவுடன் கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 2 பேரும் கஞ்சாவை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் யார்? யார்? உள்ளனர்.
கஞ்சா எங்கிருந்து, யாரிடம் இருந்து பெற்று கடத்தி வரப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து ஜெகதாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பழனிவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.