மீனவர் வலையில் வாலிபர் உடல் சிக்கிய வழக்கு: மணமேல்குடி சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசுக்கு மாற்றப்படுகிறதா?
புதுக்கோட்டை, ஜன.4-
மீனவர் வலையில் வாலிபர் உடல் சிக்கிய வழக்கு: மணமேல்குடி சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசுக்கு மாற்றப்படுகிறதா?
வாலிபர் உடல்
மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினம் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீனவர் வலையில் வாலிபர் உடல் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்லை கட்டி கடலில் இறக்கி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை அடையாளம் காண்பதில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
வலையில் சிக்கிய வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூட அரங்கத்தில் நடந்தது.
இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி கொல்லப்பட்டார்?, அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்பதில் புலன் விசாரணையை தீவிரமாக நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சட்டம்-ஒழுங்குபிரிவு போலீஸ்
இந்த நிலையில் வாலிபரின் உடலில் இருந்து தலை, தொடைப்பகுதி உள்ளிட்ட உறுப்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் அந்த வாலிபரின் உடல் நேற்று தனியார் அமைப்பின் மூலம் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு போலீசார், தன்னார்வ அமைப்பினர் இறுதிச்சடங்கு செய்து அஞ்சலி செலுத்தினர்.
கடலில் மீனவர் வலையில் வாலிபர் உடல் சிக்கிய வழக்கை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் இருந்து மணமேல்குடி சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் மணமேல்குடி போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டு அவரை அடையாளம் காண முயற்சிப்பார்கள் என தெரிகிறது.
இந்த வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மீனவர் வலையில் வாலிபர் உடல் சிக்கியதில் மர்மம் நீடித்து வருகிறது.
One Comment