கல் குவாரிகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் கொலை செய்யப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

திருமயம், ஜன.21-
கல் குவாரிகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் கொலை செய்யப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
திருமயம் அருகே கல் குவாரிகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரும், அ.தி.மு.க. பிரமுகருமான ஜகபர் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது58). இவர் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராகவும், திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு திருமயம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு எதிராக புகார்கள் தெரிவித்தும், மக்களை திரட்டி போராட்டமும் நடத்தியவர்.
மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி, அவரது கிராமத்தின் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வந்தபோது சாலையில் எதிரே வந்த மினி லாரி மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் திருமயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை வழக்காக மாற்றம்
இந்த நிலையில் ஜகபர் அலியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கல் குவாரிகளுக்கு எதிராக புகார் தெரிவித்து வந்ததில், அவரை கல் குவாரி உரிமையாளர்கள் ஆத்திரத்தில் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என, கல் குவாரி உரிமையாளர்களின் பெயர் மற்றும் லாரி உரிமையாளரின் பெயர்களை குறிப்பிட்டு ஜகபர் அலியின் 2-வது மனைவி மரியம் (37) திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையில் ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக மினி லாரியின் உரிமையாளரான திருமயத்தை சேர்ந்த முருகானந்தம் (56) திருமயம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவாிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நடந்தது விபத்து அல்ல, கல்குவாரி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
சிறையில் அடைப்பு
போலீசாரின் புலன்விசாரணையில் மினி லாரியை ஓட்டி வந்தது ராமநாதபுரத்தை சேர்ந்த காசிநாதன் (45) என்பதும், கல் குவாரி உரிமையாளரான திருமயம் அருகே பாப்பாத்தி ஊரணியை சேர்ந்த ராசு (54), அவரது மகன் தினேஷ் (28), மற்றொரு கல்குவாரி உரிமையாளரான ராமையா ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராமையா தலைமறைவாகினார்.
இதற்கிடையில் கைதான 4 பேரையும் திருமயம் கோர்ட்டில் நீதிபதி கோபால கண்ணன் முன்பு போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து கைதான 4 பேரையும் 15 நாள் காவலில் வருகிற 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி சென்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்டது எப்படி?
தலைமறைவான ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர். ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கல்குவாரிக்கு எதிராக புகார்கள் தெரிவித்து வந்ததால், விபத்தில் அவர் இறந்ததை போல் இருக்கும்படி மினிலாரியை, அவர் ஸ்கூட்டர் ஓட்டி வரும்போது மோதி, கொலை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
இதற்காக அவர் ஸ்கூட்டரில் சென்று வருவதை கண்காணித்துள்ளனர். அதுபோல சம்பவத்தன்று ஜகபர் அலி ஸ்கூட்டரில் வரும் போது மினிலாரியால் மோதி, விபத்தை போல நாடகமாடி கொலை சம்பவத்தை நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சினிமாவை மிஞ்சும் சம்பவம்
திருமயம் அருகே ஒரு கல்குவாரியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடா்பாக கடந்த 13-ந் தேதி ஜகபர் அலி, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
மேலும் அடுத்தக்கட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் படுகொலை செய்யப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் மினிலாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தலைவர்கள் கண்டனம்
சமூக செயற்பாட்டாளர் ஜாக்பர் அலியின் மரணம் அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்:
பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜாக்பர் அலியின் கொலை மிகப்பெரிய கோபத்தை தூண்டுவதாகவும், இது அரசின் தவறான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அவர் சிபிஐ விசாரணையை வலியுறுத்தியதுடன், சமூக செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பினார். “ஜாக்பர் அலி தனியாக போராடி, தனது வாழ்க்கையை சமூக நலனுக்காக அர்ப்பணித்தவர்.
அவருக்கு நேர்ந்த இச்சம்பவம் நியாயத்திற்கான போராட்டத்தைக் குறுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெகபர் அலியின் இறப்புக்கு நீதி கோரினார்
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர், “கனிமவளக் கொள்ளையர்களையும், அவருக்கு கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகளையும் பொறுப்புக்கு அழைக்க வேண்டும்” என்று கூறினார்.
தனது சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், “ஜெகபர் அலி, திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினருமான சமூக ஆர்வலரான அவர், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரை சந்தித்து, 15 நாட்கள் மற்றும் பல முறை மாவட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சமூக விரோதிகள் அவரை கொலை செய்துள்ளனர். இதனால் மக்களிடையே பெரும் அச்சம் உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர், இந்த கொலைக் குற்றத்தில் உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவரை மட்டும் கைது செய்து வழக்கை திசைதிருப்ப முயற்சியில் உள்ளதாகவும், இது திமுக அரசு மேற்கொண்ட மோசமான நடவடிக்கையாக இருக்கின்றது என்று நம்புகின்றனர்.
தலைவரின் கோரிக்கை: “ஜெகபர் அலியின் இறப்புக்கு நீதி வேண்டும். உண்மையான குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
வெளிப்படை சமூகக் குழுக்கள்
மக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் ஜாக்பர் அலியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள், அரசாங்கம் இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
தலைவர்களின் இக்கண்டனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கும், பாதுகாப்பிற்கான அவசியத்திற்கும் வெளிப்படை விளக்கமாக உள்ளன.