தமிழ்நாடு – கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிநாட்டு வாழ் வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை
புதுடெல்லி, டிச.30-
தமிழ்நாடு – கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிநாட்டு வாழ் வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாட்டுவாழ் இந்திய வாக்காளர்கள், மிகக்குறைவான அளவில் வாக்களித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் மற்றும் இதர நேரடி தேர்தல்களில் நேரடியாக இந்தியாவுக்கு வந்து வாக்களிக்க விரும்பும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளிக்கிறது.
அதன்படி, 1 லட்சத்து 19 ஆயிரத்து 374 பேர் வெளிநாட்டுவாழ் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பதிவு செய்தவர்கள் மட்டும் 19 ஆயிரத்து 500 பேர் ஆவர்.
ஆனால், இந்த ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 2 ஆயிரத்து 958 பேர் மட்டுமே இந்தியாவுக்கு வந்து வாக்களித்துள்ளனர். அவர்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் மட்டும் 2 ஆயிரத்து 670 பேர் ஆவர். தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், அசாம், பீகார், கோவா ஆகிய மாநிலங்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 885 வாக்காளர்கள் பதிவு செய்திருந்தும், 2 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். மராட்டிய மாநிலத்தில், 5 ஆயிரம்பேருக்கு மேல் பெயர் கொடுத்தும், 17 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
போக்குவரத்து செலவு, பணி, கல்வி போன்ற காரணங்களால், நேரடியாக வர வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் விரும்புவது இல்லை. அவர்களுக்கு தபால் ஓட்டு வசதி அளிக்க தேர்தல் கமிஷன் 2020-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.