டி.ஜி.பி. உத்தரவு அமல்:புதுக்கோட்டை கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
புதுக்கோட்டை, டிச.24-
டி.ஜி.பி. உத்தரவு அமல்:புதுக்கோட்டை கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாலிபர் கொலை சம்பவம்
நெல்லை மாவட்டம், கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 23). இவர் கொலை முயற்சி வழக்கில் ஆஜராக நெல்லை கோர்ட்டிற்கு வந்தபோது, கோர்ட்டுக்கு முன் ஆயுதங்களுடன் வந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும் தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் நேற்று முன்தினம் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து அந்தந்த மாநகரங்கள், மாவட்டங்களில் கோர்ட்டுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்பட கோர்ட்டுகள் அமைந்துள்ளன. இந்த கோர்ட்டுகளில் வழக்குகள் விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்கள் உள்ளிட்டோர் வருகை அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு, டி.ஜி.பி. உத்தரவின்படி புதுக்கோட்டை கோர்ட்டில் நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோர்ட்டு நுழைவுவாயில் உள்பட வளாகத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போலீசார், கோர்ட்டு பணி நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள கோர்ட்டுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.