இரட்டிப்பாக பணம் தருவதாக ஆன்லைன் மோசடி:மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டை, டிச.23-
புதுக்கோட்டையில் இரட்டிப்பாக பணம் தருவதாக ஆன்லைன் மோசடி:மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
ஆன்லைன் மோசடி
முகநூலில் ரூ.100 முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் ஈட்டலாம் என போலியான ஸ்டாக் விளம்பரத்தை நம்பி புதுக்கோட்டையை சோ்ந்த 2 பேர் ரூ.3 கோடி வரை இழந்தது தொடா்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன், தேனி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் ஆகிேயாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முதியவரிடம் ரூ.4 கோடி பறித்த கும்பல்
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இதுபோன்று பணம் இரட்டிப்பாகவும், அதிக முதலீடு லாபம் தருவதாகவும் கூறும் போலியான ஆன்லைன் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் தீவிர விசாரித்த பின் முதலீட்டில் இறங்கவும்.
மேலும் இதுபோன்று பணத்தை கொடுத்து ஏமாந்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கவும். 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
சமீபத்தில் போதைப்பொருள் கடத்தியதாக கூறி செல்போன் எண்ணிற்கு வீடியோ அழைப்பில் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் மணமேல்குடியை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் மர்ம ஆசாமிகள் தொடர்பு கொண்டு பேசி, அவரது பெயரில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதாகவும், விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி ரூ.4 கோடி வரை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
பணத்தை இழந்த முதியவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே இதுபோன்ற அழைப்புகள் வந்தால் தவிர்க்கவும், சைபர் கிரைம் போலீசில் உடனே புகார் தெரிவிக்கவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.