புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை, டிச.22-
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இறால் பண்ணைகள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகா பகுதிகளில் கடற்கரையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது.
இதில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் கடலுக்கு வடிந்தோடக்கூடிய நீர்வழிப்பாதைகளும் ஆக்கிரமிப்பில் இருந்ததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இந்த நிலையில்ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கலெக்டர் அருணா உத்தரவிட்டார். மேலும் கடற்கரையையொட்டி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த இறால் பண்ணைகளால் மழைநீர் வடிந்தோடாமல் தேங்கியது.
இதனால் 5 இறால் பண்ணைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள்
இந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கண்ட இடங்களில் கடற்கரை பகுதிகளில் வேறெங்கும் ஆக்கிரமிப்பில் இறால் பண்ணைகள் வைத்திருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகாவில் கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீர் வடிந்தோடி கடலில் கலக்கக்கூடிய பகுதிகள், அதன் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றவும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பட்டா நிலங்களில் இறால் பண்ணைகள் இருந்தால் அதனை தவிர்த்துவிடவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதனால் கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.