கலைஞர் கைவினை திட்டம்:மானியத்துடன் வங்கிக்கடன் உதவி பெற கைவினை கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை, டிச.18-
கலைஞர் கைவினை திட்டம்:மானியத்துடன் வங்கிக்கடன் உதவி பெற கைவினை கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் .
வங்கிக்கடன் உதவி
தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் “கலைஞர் கைவினை திட்டம்” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உதவி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
கலைஞர் கைவினை திட்டத்தில் அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீத மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை வங்கிக்கடன் உதவியும், 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும்.
25 வகையான தொழில்கள்
கட்டிட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை முடிதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள் சுடு மண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர்வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி
இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேற்காணும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைகலைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.