வங்கி ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி கலெக்டர் அலுவலகம் வரவழைத்து கைவரிசை
சிவகங்கை, டிச.17-
வங்கி ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி கலெக்டர் அலுவலகம் வரவழைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
வங்கி ஏல நகைகள்
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவரது மனைவி முத்துமாரி (45). இவர்களது மகன் ஸ்ரீஹரி(22). கொத்தனார். ஸ்ரீஹரிக்கு காரைக்குடியை சேர்ந்த சங்கர் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சங்கர் தான் வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும், வங்கியில் நகைகளை ஏலம் விடும்போது அந்த நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் ஸ்ரீஹரியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன்படி நேற்று சங்கர், ஸ்ரீஹரியை தொடர்பு கொண்ட சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நகை ஏலம் நடப்பதாகவும், அதில் 23 பவுன் நகைகள் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்து தருவதாகவும் கூறினாராம். இதனை உண்மை என்று நம்பிய சங்கர் தனது மனைவியின் நகையை அடகு வைத்து ரூ.5 லட்சத்தை திரட்டினாராம். பின்னர் தனது மனைவி மற்றும் தாயுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ரூ.5 லட்சம் மோசடி
கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீஹரியிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று கொண்ட சங்கர் நகையை வாங்கி வருவதாக கூறி சென்றாராம். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த ஸ்ரீஹரி அப்பகுதியில் தேடியுள்ளார். பின்னர் அவர் எங்கும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீஹரி சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கர் இதேபோன்று மற்றொரு நபரையும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து வங்கி ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.