மழைக்காலங்களில் மின்சார விபத்துகளை தடுப்பது எப்படி? அதிகாரி விளக்கம்
புதுக்கோட்டை, டிச.17-
மழைக்காலங்களில் மின்சார விபத்துகளை தடுப்பது எப்படி? அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மின்கம்பி
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். அறுந்துபோன மின்கம்பியை கண்டால் கம்பியில் இருந்து வெகு தொலைவில் விலகி இருங்கள். அறுந்துபோன மின்கம்பியை தொடும் மரம், கம்பி, வேலி, வாகனம் போன்ற எதையும் நெருங்க வேண்டாம். யாராவது அதிர்ச்சியடைந்திருந்தால் அவர்கள் இன்னும் மின்சார ஆதாரத்துடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.
அந்த நபரையோ அல்லது அவர் தொடும் எதையும் தொடவோ கூடாது. நீங்கள் மின்சாரத்தின் பாதையின் ஒரு பகுதியாக மாறி அதிர்ச்சி அடையலாம். மின் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த வேண்டும்.
பழுதடைந்த மின் ஒயர்கள்
ஈரக்கைகளால் மின் சாதனங்களை இயக்க கூடாது. 3 பின் பிளக்கில் எர்த் இணைப்பு கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். இன்சுலேஷன் இல்லாத மின்சார ஒயர்கள் மற்றும் அறுந்து, பழுதடைந்த மின் ஒயர்களை ஒட்டுப்போட்டு உபயோகிக்கக்கூடாது. மெயின் சுவிட்ச் ஆப் செய்யாமல் எந்த புதிய மின் ஒயரிங்கும் செய்யக்கூடாது. மின்கம்பத்திலோ அல்லது தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள். இடி, மின்னல்கள் ஏற்படும் போது மின்பாதையின் கீழ் நிற்காதீர்கள். பாதுகாப்பாக வீடு அல்லது கான்கிரீட் கட்டிடத்தின் கீழ் நிற்கவும். வீட்டின் சுவிட்சுகள் மற்றும் மின் சாதனங்களை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் உயரத்தில் வைத்து, அவற்றை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.