கடற்கரை பகுதிகளில் கனமழை:புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 வீடுகள் சேதம்12 கால்நடைகள் செத்தன

கடற்கரை பகுதிகளில் கனமழை:புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 வீடுகள் சேதம்12 கால்நடைகள் செத்தன

புதுக்கோட்டை, டிச.14-

கடற்கரை பகுதிகளில் கனமழை:புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 வீடுகள் சேதம்12 கால்நடைகள் செத்தன

பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை பரவலாக மழை பெய்தது. இதில் கடற்கரை பகுதிகளில் கன மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் மழை தொடர்ந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார். இதைத்தொடந்து நேற்று பள்ளிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டன. மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

மழைநீர் தேங்கியது

புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இடையில் மழை விட்டு, விட்டும் பெய்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும்பாலும் மழை கோட் அணிந்தும், குடைகளை பிடித்தப்படியும் சென்றனர். சிலர் மழையில் நனைந்தப்படி சென்றனர். தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியது. மேலும் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால்களில் கழிவுநீரும், மழைநீரும் பெருக்கெடுத்து ஓடியது. மதியத்திற்கு மேல் மழை நின்றது. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 143 மி.மீட்டரும், மணமேல்குடியில் 135.20 மி.மீ., மீமிசலில் 67 மி.மீ., நாகுடியில் 66.20 மி.மீட்டரும் மழை பதிவானது.

41 வீடுகள் சேதம்

இந்த மழையால் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என மொத்தம் 41 வீடுகள் சேதமடைந்தன. 3 மாடுகள், 9 ஆடுகள் என 12 கால்நடைகள் செத்தன. இந்த நிலையில் நேற்றும் தொடர் மழையினால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. அதனையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்டத்தில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர்.

திருவப்பூர் பகுதியில் மாங்குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறி மழைநீர் வடிகாலில் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. மேலும் காலிமனைகளில் புகுந்து தேங்கியது. சாலையில் ஓடிய மழைநீரில் மக்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்றதில் அவதி அடைந்தனர். சாலையில் ஓடிய நீரை வெளியேற்றவும், மழைநீர் வடிகாலில் செல்லும் வகையிலும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது.

மீனவ கிராமத்தில் மழைநீர் சூழ்ந்தது

மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மணமேல்குடி காந்திநகர், செங்குந்தர்புரம், வடக்கு அம்மாபட்டினம், கீழக்குடியிருப்பு, குலச்சிறையார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.

இதேபோல் பொன்னகரம் மீனவ கிராமம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை அகற்றுவது சிரமமாக உள்ளது. பொன்னகரம் மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மணமேல்குடி பகுதி முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணமேல்குடி பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து அதிகாலை முதல் மழை பெய்து வந்ததால் மணமேல்குடி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகள் மீன் வரத்து இல்லாமல் காணப்பட்டது. மணமேல்குடி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்கள் மழைநீரால் மூழ்கியுள்ளது. கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உள்ளன.அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி செல்லும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மணமேல்குடி, கோடியக்கரை கடற்கரை பகுதி முழுவதும் மழைநீரால் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருபவர்கள் வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்தது. மேலும் மணமேல்குடி பஸ் நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மழைநீரால் சூழ்ந்துள்ளதால் விற்பனையாளர்கள், மதுபிரியர்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது. இதனால் டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது.

திருவரங்குளம்

திருவரங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, கைக்குறிச்சி, பூவரசங்குடி, பாண்டா கோட்டை, வல்லத்திரா கோட்டை, கத்தக்குறிச்சி, குலவாய்ப்பட்டி, வேப்பங்குடி, மாங்கனாம்பட்டி, காயாம்பட்டி, கல்லு பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். திருவரங்குளம் சிவன் கோவிலில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button