கார்த்திகை தீப திருவிழா:கோவில்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடுசொக்கப்பனை கொளுத்தப்பட்டன
புதுக்கோட்டை, டிச.14-
கார்த்திகை தீப திருவிழா:கோவில்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடுசொக்கப்பனை கொளுத்தப்பட்டன
தீப திருவிழா
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோவில்களில் மகா தீபமும், வீடுகளில் அகல்விளக்குகள் மற்றும் குத்துவிளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் தண்டாயுதபாணி சாமி கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் குமரமலை முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
சிவன் கோவில்களில் சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டன. மேலும் கோவில்களில் அகல் விளக்குகளும் வரிசையாக ஏற்றப்பட்டிருந்தன. திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அகல்விளக்குகள்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வீடுகளிலும் பக்தர்கள் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். வீட்டின் முகப்பு பகுதியில் குத்துவிளக்கு, அகல்விளக்குகள் ஏற்றியும், வீட்டின் நுழைவுவாயில்கள், வாசற்படிகள், வீட்டின் உள் அறைகளில் அகல்விளக்குகள் ஏற்றி, சாமி படத்தின் முன்பு கார்த்திகை பண்டிகை பலகாரமான கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதேபோல் வணிக நிறுவனங்கள், கடைகள் முன்பு அகல்விளக்குகளும், அகல் விளக்குகள் போன்ற மெழுகுவர்த்தி ஏற்றியும் கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடினர். ஒரு சிலர் வீடுகளில் கம்பி மத்தாப்பூ, வானில் வர்ணஜாலம் காட்டக்கூடிய வெடிகள், மத்தாப்பூ வகைகளை கொளுத்தி மக்கள் கொண்டாடினர். புதுக்கோட்டை மாநகரில் நேற்று இரவு மக்கள் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடிய நேரத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் மக்கள் சற்று அவதி அடைந்தனர்.
விராலிமலை
விராலிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் கார்த்திகையையொட்டி நேற்று காலை மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானைக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தீப கோபுரத்தில் தீபம் ஏற்றாமல் மலைமேல் உள்ள காத்தாடி மண்டபத்தில் தீப கோபுரம் அமைத்து அதில் நெய் ஊற்றி மாலை 6.25 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதில் உள்ளுர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
சொக்கப்பனை
காரையூர் அருகே உள்ள வையாபுரி பாலகிரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சொர்க்கப்பனை தீபம் ஏற்றுதல் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பாலகிரி சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலில் முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில், காரையூர், அரசமலை மற்றும் வையாபுரி சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆலஙகுடி தர்மஸம் வர்த்னி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் பெரிய தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சாமி மற்றும் அம்பாளுக்கு பலவிதமான விளக்குகளால் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் முன்பு கட்டப்பட்டிருந்த சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு பலவிதமான அபிஷேகங்ள் செய்து சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் குப்பகுடி வெற்றி ஆண்டவர்கோவில், கோவிலூர் மாரியம்மன் கோவில், நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், கல்லாலங்குடி சித்தி விநாயகர் கோவில், முத்துமாரியம்மன் ஆகிய கோவில்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது.
அரிமளம், திருவரங்குளம்
அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம், கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, நமணசமுத்திரம், ராயவரம், கடியாப்பட்டி, ஏம்பல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் அகல் விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி கார்த்திகை தீபத்தை உற்சாகமாக ஏற்றினார்கள். ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்தாலும் கோவில்களில் பக்தர்கள் வண்ண வண்ண கோலமிட்டு கார்த்திகை விளக்கை ஏற்றினார்கள். வியாபார நிறுவனங்களில் வியாபாரிகள் கார்த்திகை தீப விளக்கேற்றி சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி சமேத அரங்குளநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளைெயாட்டி 75 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் வாசலில் சொர்க்கப் பனை கொளுத்தப்பட்டது. மேலும், சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானைக்கு மாவிளக்கு மற்றும் அர்ச்சனை செய்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.