ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போர் நிறுத்த தீர்மானம் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ரத்து செய்த அமெரிக்கா.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போர் நிறுத்த தீர்மானம் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ரத்து செய்த அமெரிக்கா.
காசாவில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது.

2 ஆண்டுகளாக போர்
காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.
ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி வரும் இஸ்ரேல், அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகிறது.
அத்துடன் காசாவை சேர்ந்த மக்களுக்கு சர்வதேச நிறுவனங்களிடம் வரும் நிவாரண உதவிகளையும் தடுக்கிறது. இதனால் காசாவில் பட்டினிச்சாவுகளும் அதிகரித்து வருகிறது.
எனவே காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
14 நாடுகள் ஆதரவு
காசாவில் மனிதாபிமான சூழல் மிகவும் பேரழிவை நோக்கி செல்வதாகவும், எனவே நிவாரண பொருட்களை வழங்குவதற்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் காசாவில் உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் செய்யவும், இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மொத்தம் 15 நாடுகளில் 14 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.
‘வீட்டோ’ அதிகாரம் மூலம் ரத்து
ஆனால் அமெரிக்கா தனது ‘வீட்டோ‘ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை ரத்து செய்தது. இதனால் தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
ஹமாசை கண்டிப்பது தொடர்பாக தீர்மானத்தில் போதிய வீரியம் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதரும், கொள்கை ஆலோசகருமான மோர்கன் ஒர்த்தாகஸ் கூறுகையில், ‘இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இது ஹமாசை கண்டிப்பதையோ, இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கான உரிமையை அங்கீகரிக்கவோ தவறிவிட்டது. ஹமாசுக்கு பயனளிக்கும் தவறான கதைகளை தவறாக நியாயப்படுத்துகிறது.
துரதிர்ஷ்டவசமாக இந்த கவுன்சிலில் அவர்கள் நாணயத்தைக் கண்டறிந்துள்ளனர்’ என தெரிவித்தார்.
இஸ்ரேல் தொடர்ந்து போராடும்
இதைப்போல இஸ்ரேலும் இந்த தீர்மானத்தை சாடியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருக்க விரும்பினாலும், இஸ்ரேல் ஹமாசுக்கு எதிராக தொடர்ந்து போராடி தனது குடிமக்களைப் பாதுகாக்கும் என ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டனோன் கூறினார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலின் 14 துணிச்சலான உறுப்பினர்கள் மனசாட்சியுடன் செயல்பட்டு, சர்வதேச பொதுக் கருத்தின் பேரில் செயல்பட்டுள்ளனர் எனக்கூறிய அல்ஜீரியாவுக்கான ஐ.நா. தூதர் அமர் பென்ஜமா, ஆனால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இருண்ட தருணம்
பாதுகாப்பு கவுன்சிலின் 10,000-வது கூட்டத்தில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு மற்றும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது ஒரு இருண்ட தருணம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
தீர்மானம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாலஸ்தீனமும் ஏமாற்றம் தெரிவித்து இருக்கிறது.
காசாவில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துள்ளது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு ரத்து நடவடிக்கையை எடுத்திருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.





