ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று: 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை, தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.
ராமேசுவரம், ஜூலை.18-
ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.
கடல் உள்வாங்கியது
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை. இந்த அரிச்சல்முனை வரை சாலை வசதி வந்த பின்னர் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரம் வரக்கூடிய அனைத்து சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து இரண்டு கடல் சேருமிடம் மற்றும் கடற்கரை சாலை அழகையும் பார்த்து ரசித்து விட்டுதான் செல்கின்றனர். தனுஷ்கோடி கடல் பகுதி இயற்கையாகவே கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை வடக்கு கடல் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. பல அடி தூரத்திற்கு வெறும் மணல் பரப்பாகவே இருந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் பலர் மணல் பரப்பில் இறங்கி நின்றும் மணலில் சிவலிங்கம் செய்தும் விளையாடினர்.
2-வது நாளாக மீன்பிடிக்க தடை
மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடல் சீற்றமாக இருப்பது தெரிந்தும் ஆபத்தை அறியாமல் கடலுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். பகல் 11 மணிக்கு பிறகு கடல் நீர் மீண்டும் ஏறத்தொடங்கியது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதற்கிடையே மதியத்திற்கு பிறகு மீண்டும் கடல் நீர் ஏறி இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதேபோல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி, கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2-வது நாளாக 700-க்கும் மேற்பட்ட விசை படகுகளும், 1200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.