மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை.
புதுக்கோட்டை, ஜூலை.3-
மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லம் தேடி கல்வி திட்டம்
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கற்றல் வாய்ப்பு குறைந்திருந்த நிலையில் கற்றல் திறனை வளர்க்கவும், மாணவர்களின் அச்சத்தை போக்கி அவர்களின் தனி திறமைகளை வெளிக் கொணரவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்புகளை நடத்தி வந்தனர். இந்த இல்லம் தேடி கல்வி வகுப்புகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர். பாடப்புத்தகத்தை தாண்டி விளையாட்டு, ஓவியம், கலை நிகழ்வுகளுடன் மாலை 5 மணி தொடங்கி இரவு 7 மணி வரை இந்த வகுப்புகள் நடைபெற்றன.
வகுப்புகள் நிறுத்தம்
கல்வியாளர்களாலும், பெற்றோர்களாலும் பாராட்டப்பட்ட இந்த வகுப்புகள் மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் கற்றல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்தது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் இல்லம் தேடி கல்வி வகுப்புகளை நிறுத்தி வைக்கும் படி கல்வி துறை அதிகாரிகள் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டனர். வழக்கமாக நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு சென்று தன்னார்வலர்களிடம் வகுப்புகளை நடத்தும் படி வலியுறுத்தியும் வந்தனர்.
பெற்றோர்கள் கோரிக்கை
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் பின் தங்கிய பகுதிகளில் மட்டும் இல்லம் தேடி கல்வி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி மற்றும் கறம்பக்குடி ஒன்றியங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி பயின்று வந்த நிலையில் தற்போது 5-ம் வகுப்பு வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உற்சாகம் இழந்து உள்ளனர். பல மையங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இல்லம் தேடி கல்வி திட்டத்தை அனைத்து மையங்களிலும் நடைபெற செய்து மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் கூறுகையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. பள்ளிக்கு செல்ல அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இல்லம் தேடி கல்விக்கு மிக உற்சாகத்துடன் சென்றனர். இல்லம் தேடி வகுப்புக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய பின்பு கதை சொல்வது, பாட்டு பாடுவது என குழந்தைகள் தங்கள் தனி திறனை வெளிப்படுத்தியதை பார்க்கும் போது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது 5-ம் வகுப்பு வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளதால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இல்லம் தேடி கல்வி திட்டத்தை முன்பு போல் அனைத்து மையங்களிலும் தடையின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.