பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு; அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பலி.
தென்காசி, மே.18-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அவனது உடல் மீட்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை
தமிழகத்தில் கோடைவெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தென்காசி மாவட்டத்தில் 19-ந் தேதி வரையிலும் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்தனர்.
வெள்ளப்பெருக்கு
மதியம் 1 மணியளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் வியாபாரிகள், குளித்து கொண்டிருந்தவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் அங்கு உற்சாகமாக குளித்த சுற்றுலா பயணிகள் அனைவரும் பதறியடித்தவாறு படிக்கட்டுகள் வழியாக இறங்கி அருவிக்கரைக்கு வெளியே ஓடி வந்தனர். எனினும் அருவியில் கரைபுரண்ட வெள்ளம் படிக்கட்டுகளின் வழியாக பாய்ந்தோடியது.
மாயமான சிறுவன்
அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வேகமாக வெளியே ஓடி வந்தபோது, அவர்களில் நெல்லை ஸ்ரீராம்நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் அஸ்வினை (வயது 17) காணாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அருவியில் இருந்து வெளியே ஓடி வந்ததில் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த அருண் (30) என்பவருக்கு தலையிலும் கையிலும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் மீட்பு
வெள்ளத்தில் சிக்கி மாயமான அஸ்வினை உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். இதுகுறித்து குற்றாலம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா, உதவி அலுவலர் பிரதீப் குமார், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர் தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர்.
தீயணைப்புத் துறையினர் சுமார் 30 பேர் அருவிப்பகுதி மற்றும் அருவி தண்ணீர் செல்லும் பகுதியில் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருவி பகுதியில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் ஒரு பாறையின் அருகில் அஸ்வின் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அஸ்வினின் உடலை அங்கிருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அஸ்வினின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
உறவினர்கள் கதறல்
பலியான அஸ்வின் தந்தை குமார் சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.மேலும், அஸ்வின் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலகரத்திற்கு தனது உறவினர் வீட்டிற்கு அவர் வந்திருந்தபோது பழைய குற்றாலத்தில் குளிக்க சென்றிருந்தார். அப்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இறந்த அஸ்வினின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும், நீர்வரத்து குறித்து அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.