தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று முதல் அதிரடி உயர்வு!
வணிக கேஸ் சிலிண்டர் விலையானது மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1) அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டரின் விலையை மாதம் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ கொள்ளளவு உள்ள வணிக கேஸ் சிலிண்டர் விலையானது ரூ.38 உயர்வு கண்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று செப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
நகரம் வாரியாக புதிய விலை விவரம்
இந்த விலை உயர்வின் படி சென்னையில், ரூ.1,817 ஆக விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,855 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல இனி டெல்லியில் ₹1,691.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,803.50-க்கும், மும்பையில் ரூ.1,644 ரூபாய்க்கும் வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் தற்போது எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை ஆகிறது.