திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; நவம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; நவம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2025-26-ம் ஆண்டுக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன.

இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகப் கொள்ளப்பெறும்.
இணையதள முகவரி
போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு, புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவர்.
ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.
விரிவான விதிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பெறும். போட்டியில் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித்துறை வலைத்தளம் https://tamilvalarchithurai.org/tkm/-ல் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பெறமாட்டாது.
கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டையில் தமிழ் வளர்ச்சி துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





