தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது; 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது; 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
அணைகள்
இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.

தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானிசாகர், அமராவதி, முல்லைப்பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும்.
அதில் தற்போது 182 டி.எம்.சி. நீர் இருக்கிறது. அதாவது மொத்தம் 81 சதவீதம் நீர் கைவசம் உள்ளது.
இதற்கு காரணம், பெரும்பாலான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கேரளா, கர்நாடகாவில் இருப்பதால் அங்கு பெய்த தென்மேற்கு பருவ மழையால் நிரம்பி இருக்கிறது.
இருப்பினும் தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் கண்மாய்கள், ஏரிகள் ஆகியவை நிரம்புவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் வடகிழக்கு பருவமழை தான் மிக முக்கியமானது.
எச்சரிக்கை
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இன்று (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
மேலும் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் வருகிற 18-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும்.
எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மழையளவு அதிகம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் அமுதா, கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தென் கர்நாடகா, தென் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அன்றைய தினமே மழை கொட்டி தீர்க்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எங்களை பொறுத்தவரை 50 இடங்களில் மழை பதிவானால் கூட, அது வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம்தான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும்.
ஆனால் இந்த முறை இது 50 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 2 செ.மீ. அதிகம் ஆகும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் சராசரி மழையளவு 33 செ.மீ. பதிவாகி உள்ளது.அதாவது இந்த பருவமழை கூடுதலாகவும், குறைவாகவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
குறைந்த காற்றழுத்தம்
ஒரு மேல்நிலை சுழற்சி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய சமவெளிக் கடலில் உள்ளது. இது குமரிக்கடல் பகுதி நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
அதன் காரணமாக 19-ந் தேதியன்று தென் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை இது தீவிரமடைந்தால் தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
