விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க உத்தரவு.

விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க உத்தரவு.
சாலைகளில் திரியும் கால்நடைகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன.
கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதனை தங்கள் பகுதியில் கட்டி வைத்து மேய்ச்சலுக்கு விடாமல் அவிழ்த்துவிட்டு சாலைகளில் திரிய விட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் முக்கிய சாலை பகுதிகளில் சர்வ சாதாரணமாக சென்ற வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விபத்துகள் அதிகரிப்பு
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக சாலை விபத்துகளில் கால்நடைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. குறிப்பாக இரவு மற்றும் பகல் வேளைகளில் சாலைகளின் குறுக்கே செல்லும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பலர் பலியாகி வருகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த கால்நடைகளால் சொல்ல முடியாத அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல பகுதிகளில் கால்நடைகளின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏராளமானோருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளை பிடிக்க உத்தரவு
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவரவர் பகுதிகளில் தங்கள் கால்நடைகளை கட்டி வைத்து மேய்ச்சலுக்கு விட வேண்டும். இதை மீறி சாலைகளில் கால்நடைகளை திரிய விட்டால் அதனை பிடித்து கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் நகர சபை ஆணையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க உத்தரவிடப்படும். எனவே உடனடியாக கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மீறினால் கால்நடைகளை பிடித்து அடைப்பதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.





