தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்றிருந்த 73 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்‘ காஷ்மீரில் இஸ்லாமிய மக்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்ததாக நெகிழ்ச்சி’

73 பேர் சென்னை வந்தனர்
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதையடுத்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலா பயணிகளை உடனடியாக அழைத்துவர தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள், காஷ்மீரில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
முதற்கட்டமாக டெல்லியில் இருந்து மதுரை, கும்பகோணம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து சுற்றுலா சென்றிருந்த 25 பேர் விமானம் மூலமாக அதிகாலை 2 மணிக்கு சென்னை திரும்பினர்.
2-ம் கட்டமாக டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னை, மதுரை, திருச்சி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 48 பேர் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் வள்ளலார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
சொந்த ஊர்களுக்கு…
சென்னை வந்த அனைவரும் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் வள்ளலார் கூறும்போது,
“தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக காஷ்மீர் சென்றவர்களை தொடர்பு கொண்டோம். அதிகாலை சென்னை வந்த 25 பேருக்கு, வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 48 பேர் சென்னை திரும்பி உள்ளனர்.
இவர்கள் மதுரை, திருச்சி, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்றார்.
காஷ்மீர் மக்கள் உதவினர்
சென்னை திரும்பிய திருச்சியை சேர்ந்த நடராஜன் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தோம். டிரைவர்கள், காஷ்மீர் மக்கள் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர். இந்து, முஸ்லிம் என்று சொல்கின்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள் அப்படி இல்லை. நாங்கள் தங்கி இருந்தது முஸ்லிம் இடத்தில்தான். அக்கறையுடன் கவனித்து கொண்டார்கள். அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாகத்தான் தங்களது வாழ்வாரதாரம் பெருகி வருவதாக கூறுகின்றனர்.
ஈவு இரக்கம் இல்லாமல் செய்தவர்களை தண்டிக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்கள் எல்லாரையும் பயங்கரவாதிகள்போல் காட்டுகின்றனர். ஆனால் அங்குள்ள மக்கள் அப்படி இல்லை. அவர்கள் அன்பானவர்கள். பஸ் விபத்து என்று கூறிதான் எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டனர். ராணுவம், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையை சேர்ந்த ஜோதி கூறும்போது, “பஹல்காம் பகுதியில் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. ராணுவம் மற்றும் காஷ்மீர் டிரைவர்கள் எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
மத்திய அரசுக்கு முன்பாகவே காஷ்மீர் மக்கள்தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் அன்பானவர்கள். தமிழ்நாடு அரசு சார்பில் எங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் சென்னை திரும்பியவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.





