புதுக்கோட்டை மாவட்டத்தில்வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில்வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழைப்பொழிவு:
தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அதன் பின்னர், அக்டோபர் முதல் டிசம்பர் முடிய வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதனை அடிப்படையாக கொண்டே, அனைத்து விதமான விவசாய பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக 8 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது மே 24-ந்தேதியன்றே கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் இறுதியில் முடிந்தது. தமிழக அளவில் இயல்பை விட குறைவான அளவே மழைப்பொழிவு இருந்தது.
வடகிழக்கு பருவமழை:
தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக. தித்வா புயல் உருவாகி, பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. ஆனால், நவம்பர் இறுதியிலிருந்து பல மாவட்டங்களில் வழக்கமான அளவு கூட மழை பெய்யவில்லை.
தற்போது டிசம்பர் இறுதியில், வடகிழக்கு பருவமழை நிறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, தமிழகத்தில் வழக்கத்தை விட நடப்பாண்டு 3 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பு மழையளவு 439.8 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் நடப்பாண்டு 427.2 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
தென் மாவட்டத்தில் அதிகம்:
இதுபோல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இயல்வை விட குறைந்த அளவே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதே சமயம், நடப்பாண்டு தென்மாவட்டங்களில் மட்டும் எதிர்பார்த்ததை விட நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக நெல்லையில் 96 சதவீதமும், தென்காசியில் 40 சதவீதமும், விருதுநகரில் 25 சதவீதமும், திருவாரூர் 15 சதவீதமும், தூத்துக்குடியில் 8 சதவீதமும் கூடுதலாக பெய்துள்ளது. இதுதவிர, ராணிப்பேட்டை 21 சதவீதமும், ராமநாதபுரத்தில் 16 சதவீதமும், திருவள்ளூரில் 15 சதவீதம், வேலூர் 12 சதவீதம், சிவகங்கை 5 சதவீதமும் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மீதமுள்ள மற்ற மாவட்டங்களிலும் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக வெகுவாக சரிந்துள்ளது.
குறைந்தது :
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை உரிய காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு பொய்யவில்லை. அதாவது, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே இருந்துள்ளது. நடப்பாண்டு மழை குறைந்த காரணத்தால், 4 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளன.





