புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்.
புதுக்கோட்டை, ஏப்.5-
புதுக்கோட்டையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
தபால் வாக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 206 பேரும், புதுக்கோட்டையில் 171 பேரும், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை தொகுதியில் 342 பேரும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் தொகுதியில் 25 பேரும், ஆலங்குடி தொகுதியில் 181 பேரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 245 பேரும் என மொத்தம் 1,400 பேர் உள்ளனர்.
இதே போல மாற்றுத்திறனாளிகளில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் 110 பேரும், விராலிமலையில் 286 பேரும், புதுக்கோட்டையில் 67 பேரும், திருமயத்தில் 183 பேரும் ஆலங்குடியில் 59 பேரும், அறந்தாங்கியில் 187 பேரும் என மொத்தம் 902 பேர் உள்ளனர்.
படிவம் பெறப்பட்டது
நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு பதிவிற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தங்களுக்கு தபாலில் வாக்குப்பதிவு அளிக்க விருப்பம் தொடர்பாக படிவம் வினியோகிக்கப்பட்டு பெறப்பட்டது. இதையடுத்து 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று படிவம் பெறப்பட்டது.
வாக்களித்தனர்
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் 86 வயதான முதியவர்கள் தனது வாக்கினை வீட்டில் பதிவு செய்து, அந்த தபாலை வாக்குப்பெட்டியில் செலுத்தினார்கள். மேலும் அவர்கள் வாக்களித்ததை வீடியோவில் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று மாற்றுத்திறனாளிகள் வாக்கினை பதிவு செய்து வாக்குப்பெட்டியில் செலுத்தினார்கள். இந்த வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) முடிவடைகிறது.