ஏப்ரல் 19 தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு!
சென்னை,ஏப்ரல்.05-
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மேலும், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.