புதுக்கோட்டை-அறந்தாங்கி-மீமிசல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்

புதுக்கோட்டை-அறந்தாங்கி-மீமிசல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்
4 வழிச்சாலையாக விரிவாக்கம்
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. இருவழிச்சாலையான இதனை 4 வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
புதுக்கோட்டையில் இருந்து சாலை விரிவாக்கப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டையில் இருந்து கைக்குறிச்சி வரை 4 வழிச்சாலைகள் முதற்கட்டமாக முடிக்கப்பட்டன.
அதன்பின் கைக்குறிச்சியில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியது. இதற்காக சாலையோரங்களில் இருந்த மரங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வெட்டி அகற்றப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வல்லாத்திராக்கோட்டை
இந்தநிலையில் கைக்குறிச்சியில் இருந்து வல்லாத்திராக்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வல்லாத்திராக்கோட்டைக்கு முன்பாக ஒரு பகுதியில் விரிவாக்க பணிகள் முடிந்து, மறு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்த இடத்தில் வாகனங்கள் செல்ல பெரும் வசதியாக உள்ளது. புதிய சாலையில் வாகனங்கள் வேகமாக கடந்து செல்கின்றன. சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் சிக்னல் கம்பங்களும், விபத்து தடுப்பு பலகைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
பயண நேரம் குறையும்
புதுக்கோட்டை-அறந்தாங்கி நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக முழுமையாக மாற்றும் பணி அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 வழிச்சாலை மூலம் புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையே வாகன போக்குவரத்து பயண நேரம் குறையும். வாகனங்கள் எளிதாக செல்ல வசதியாக இருக்கும்.
இதேபோல் அறந்தாங்கியில் இருந்து மீமிசல் வரையிலான நெடுஞ்சாலையும் 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடற்கரை பகுதியான மீமிசல் வரை வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும்.





