நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் பனங்குளம் ஊராட்சிமன்ற கிராம மக்கள்.
கீரமங்கலம், மார்ச்.28-
பனங்குளத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பனங்குளம் ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் ஆகாமல் இருந்ததால் அப்பகுதி மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறவில்லை. அதனால் அப்போது பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி உடனே உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பிறகு விண்ணப்பங்கள் எதனால் நிராகரிக்கப்பட்டது என்று இணையத்தில் ஆய்வு செய்த போது ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் காட்டப்பட்டது.
தேர்தல் புறக்கணிப்பு
இந்த நிலையில் பனங்குளம் தெற்கு 3-வது வார்டு பொதுமக்கள் 160 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கடைவீதியில் பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், பனங்குளம் ஊராட்சியில் 3-வது வார்டில் உள்ள அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். மகளிர் உரிமைத்தொகை பெற அனைத்து தகுதிகளும் எங்களுக்கு உள்ளது. ஆனால் அதிகாரிகள் திட்டமிட்டே எங்கள் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் எங்கள் பகுதியை புறக்கணித்துள்ளனர். அதனால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.