பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
புதுடெல்லி, டிச.19-
பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
ஈரான் நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 28 மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி பஹ்ரைன் கடற்படை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. அதன் பின்னர் தமிழக மீனவர்கள்28 பேருக்கும் 6 மாதங்கள்சிறை தண்டனை விதித்துபஹ்ரைன் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும், மீனவர் சங்கங்களும் பஹ்ரைன் சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து தமிழக மீனவர்களின் தண்டனை காலம் 6-ல் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி தண்டனை காலம் முடிந்து கடந்த 10-ந் தேதி தமிழக மீனவர்கள் 28 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் நேற்று நாடு திரும்பினர். இந்த தகவலை பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.