பாம்பன் புதிய பாலத்தில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் ஆய்வு: தனி என்ஜினில் சென்று பார்வையிட்டார்
ராமேசுவரம், டிச.19-
பாம்பன் புதிய பாலத்தில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் ஆய்வு: தனி என்ஜினில் சென்று பார்வையிட்டார்.
புதிய ரெயில்பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பாலத்தை கடந்த மாதம் ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர், பாலத்தில் 70 கிலோமீட்டர் வேகம் வரை ரெயில் இயக்கலாம், அதே நேரம் உப்பு காற்றால் துருப்பிடிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும் சில பணிகளை ெசய்தாக வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை 5 பேர் கமிட்டி ஆய்வு செய்தபின்னர் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
செயல் இயக்குனர் ஆய்வு
இந்நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் திலீப்குமார் நேற்று ராமேசுவரம் வந்தார். அவர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள், பிளாட்பார பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இதற்கிடையே நேற்று காலை மதுரையில் இருந்து ஆய்வு ரெயில் என்ஜின் ஒன்று புறப்பட்டு ராமேசுவரம் வந்து சேர்ந்தது. அந்த என்ஜினில் ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் திலீப்குமார், பயணம் செய்தபடி பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு வந்தார். சென்சார் கருவிகள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டிராலியில் சென்று தூக்குப்பாலத்தையும் பார்வையிட்டார்.
அப்போது ரெயில்வே கட்டுமான நிறுவன அதிகாரிகள் (ஆர்.வி.என்.எல்.), புதிய ரெயில் பாலத்தில் செய்திருக்கும் வசதிகள் குறித்து அவரிடம் விளக்கி கூறினர்.
விரைவில் போக்குவரத்து
இந்த ஆய்வு குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “அனைத்து விதமான பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலம் உள்ளது. விரைவில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும்,” என கூறினார்.