புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: பெயர்களை பதிய 21-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை, டிச.17-
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: பெயர்களை பதிய 21-ந் தேதி கடைசி நாள் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை 01.01.2000 அன்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் திருக்குறள் தொடர்பான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா ஆகிய போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
வருகிற 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு பேச்சுப்போட்டியும், 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு வினாடி-வினா போட்டியும் நடைபெறும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும் கலந்து கொள்ளலாம்.
திருக்குறளின் ஏதேனும் 5 அதிகாரங்களை குழந்தைகள் பொருளுணர்ந்து, உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும். பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வோர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரை புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.