எழுத்தறிவு திட்டத்தில்கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு.
புதுக்கோட்டை, மார்ச்.24-
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் 2023-2024-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்ட சிறைகளில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத கைதிகளை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு கடந்த 6 மாத காலமாக தன்னார்வலர்களை கொண்டு 9 மாவட்ட சிறைகளில் பயிற்சி நடைபெற்று வந்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 2 தன்னார்வலர்கள் மூலம் கற்போர் மையங்களில் 61 கைதிகளுக்கு கடந்த 6 மாதமாக அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் வாழ்வியல் சார் திறன் குறித்த பயிற்சி நடத்தப்பட்டு வந்தது.
இதில் பயின்று வந்த அனைவருக்கும் சிறப்பு எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா, உதவி திட்ட அலுவலர் சுதந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது சிறை கண்காணிப்பாளர்கள், எழுத்தறிவுத்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தன்னார்வ ஆசிரியர்கள் அனைவரும் உடனிருந்தனர்.