திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்: 2 பெட்டிகளில் தீப்பற்றியது!
சென்னையை அடுத்த கவரப்பேட்டை பகுதி அருகே சரக்கு ரயிலும். பயணிகள் ரயிலும் மோதி விபத்து
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்’ ரயில்(12578), சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணி அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டைக்கு வரவேண்டிய ரயில் தாமதமாக 9.24 மணிக்கு வந்துள்ளது.
தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் தீப்பற்றியது.
இந்த விபத்தில் பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன. ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
விபத்து நடைபெற்றதும் ரயிலில் பயணித்த பயணிகள் வெளியேறிய நிலையில், தீப்பிடித்த இரண்டு பெட்டிகளில் பயணித்த பயணிகள் வெளியேறி விட்டார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ளனர்.