தஞ்சை சோழபுரத்தில் காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி இடத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர் ஷாஜகான்!
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் காவல் நிலையத்துக்கு நிரந்தரமாக கட்டடம் கட்ட தனது சொந்த நிலத்தை ஷாஜகான் என்ற தொழிலதிபர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா காவல் நிலைய சரகத்துக்குள் சோழபுரம் இருந்தது. இதில் சோழபுரத்தை தனியாக பிரித்து திருப்பனந்தாள் காவல் நிலைய சரகத்துக்குள் புதிய காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
இந்த புதிய காவல் நிலையம் என்பது கடந்த 2021 பிப்ரவரி 13ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலையம் என்பது வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சோழபுரம் காவல் நிலையத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலம் தேடும் பணி என்பது தொடங்கியது.
இந்நிலையில் சோழபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான் (வயது 68) என்ற தொழிலதிபர் தனக்கு சொந்தமான 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை தானமாக வழங்கி உள்ளார்.
இந்த நிலத்தின் மதிப்பு என்பது ரூ.2 கோடியாகும்.
இதுதொடர்பாக ஷாஜகான் திருவிடைமருதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து தனது நிலத்தை காவல்துறைக்கு பதிவு செய்து தானமாக வழங்கினார்.
ஷாஜகான் வழங்கிய தான பத்திரத்தை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜிகே ராஜூ, திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கரிகாலச்சோழன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
இதுதொடர்பாக ஷாஜகான் கூறுகையில், ‛‛சோழபுரத்தில் காவல் நிலையம் கட்ட ஒரு இடம் வேண்டும். தெரிந்த இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் அதிகாரிகள் கேட்டனர். அப்போது என்னிடம் ஒரு நிலம் இருக்கிறது. அதை வேண்டுமானால் முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினேன். அதை கேட்டு அவர்கள் சந்தோஷமாகி விட்டனர். இப்போது அந்த நிலத்துக்கான பத்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன்.
எனக்கு சொந்தமான 20 ஆயிரம் சதுரஅடி நிலத்தை தமிழ்நாடு காவல்துறைக்கு தானமாக வழங்கி உள்ளேன். இந்த இடம் இனி காவல்துறைக்கு சொந்தமானது. எங்கள் ஊர் சோழபுரம். சோழபுரத்துக்கு அவசியம் என்பதால் காவல் நிலையத்துக்காக இந்த நிலத்தை வழங்கி உள்ளேன். இன்று (அதாவது நேற்று) எனக்கு 45 வது கல்யாண நாள். அன்றைய தினமே இந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது. நானும், எனது மனைவியும் மனநிம்மதியோடு, மனமகிழ்ச்சியோடு இந்த நிலத்தை கொடுத்துள்ளோம்’’ என்றார்.
இதுபற்றி டிஎஸ்பி ஜிகே ராஜூ கூறுகையில், ‛‛சோழபுரத்தில் காவல் நிலையம் அமைக்க நாங்கள் இடம் தேடிக்கொண்டு இருந்தோம். இந்த வேளையில் ஷாஜகான் என்பவர் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை மனப்பூர்வமாக காவல்துறைக்கு இலவசமாக வழங்கி உள்ளார். அந்த நிலத்தை அவரது திருமணநாளில் எங்களுக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார்.
காவல்துறை சார்பாக ஷாஜகானுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார். சோழபுரம் காவல் நிலையத்துக்காக ரூ. 2 கோடி மதிப்பிலான இடத்தை இலவசமாக கொடுத்துள்ள தொழிலதிபர் ஷாஜகானை காவல்துறையினர் மற்றும் அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.